Sunday, October 30, 2011

''வேண்டாம்..............வேண்டாம்.....................''



*************************************************
''வேண்டாம்..............வேண்டாம்.....................''
*************************************************
உன்னை நேரில் கண்டபோது
இனிமேல் தான் என் வாழ்க்கைக்கு
ஓர் அர்த்தம் வரப்போகிறதென மகிழ்ந்தேன்.

''போய்வருகிறேன்'' என்று கூறிய
ஒரு வார்த்தையிலேயே அன்றே
நான் நடமாடும் பிணமாகிவிட்டேன்.

குறைந்தளவு நீ இந்த வார்த்தையாவது கொடு.

என்னைக் கைப்பிடிக்க வேண்டாம்.
நேசித்தாலே போதும்.

விரும்ப வேண்டாம்,
வேண்டவே வேண்டாம்;
அன்பு காட்டினாலே போதும்.

அன்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை.
வெறுக்காமல் இருந்தால் போதும்.

குறைந்தளவு இந்த வரத்தையாவது கொடு.

என் கற்பனைகளையும் கனவுகளையும்
ஒன்றுக்கும் உதவாத காகிதத்
துண்டுகளைப் போல்
கிழித்தெறிந்துவிடாதே.

ஒருமுறை;
நம் தெருவோரத்தில் கூண்டுக்குள்
அடைபட்டுக் கிடந்த புறாக்களை
வானில் பறக்கவிட்டு மகிழ்கிறாய்.

மீனவன் ஒருவன் பிடித்துவந்த இரு
அழகிய மீன்களை விலைக்கு வாங்கித்
தடாகத்தில் அவற்றைத் துள்ள விடுகிறாய்.

என்றோ என் உள்ளுயிரை வாங்கி வைத்திருக்கும்
உன்னை இன்று வியந்து பார்க்கிறேன்.

''என்ன பார்க்கிறீர்கள்...உங்களுக்கும்''

''வேண்டாம்..............வேண்டாம்.....................''
என்னை மட்டும் விட்டுவிடாதே !
விடுதலை செய்துவிடாதே !
நான் உன்னைக் கெஞ்சுகிறேன்.......
வேண்டாம்.................

No comments:

Post a Comment